30 நவம்பர் 2014 கல்கி வார இதழில் வெளிவந்த எனது கட்டுரை:
இலங்கைக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் ரோஹித் சர்மா எடுத்துள்ள 264 ரன்கள் அபார சாதனை. ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தபோதிலும், இலங்கை அணியின் பந்து
வீச்சும், தடுப்பும் மோசமாக இருந்தும், 173 பந்துகளில் அவர் எடுத்த 264 ஒரு
ஸ்பெஷல் இன்னிங்க்ஸ்.
விரல் எலும்பு முறிவு காரணமாக
முதல் 3 போட்டிகளில் ஆடாமல், 4வது போட்டியில் களமிறங்கியபோது, ரோஹித்
தொடக்கத்தில் நிதானமாகவே ஆடினார், அதாவது முதல் சதமெடுக்க 100 பந்துகள்
ஆனது. அதன் பின் தான் பிரம்மாண்ட விளாசல்!
ரோஹித் எதிர்கொண்ட அடுத்த
73 பந்துகளில் அவர் 164 ரன்கள் குவித்தார்! ஸ்டிரைக் ரேட் 225%. அந்த 164
ரன்களில் 21 பவுண்டரிகளும், 8 சிக்ஸர்களும் (132 ரன்கள்) அடங்கும். அதோடு,
அதிரடி ஆட்டத்தில் திறமை மிக்க விராத் கோலியுடனான 200 ரன்கள்
பார்ட்னர்ஷிப்பில், ரோஹித் எடுத்தது 132 ரன்கள், கோலி எடுத்தது அதில்
சரிபாதி 66 தான். இதிலிருந்தே அது ஓர் அசாதாரணமான, அபாரமான, அரிதான ஒரு
நாள் இன்னிங்க்ஸ் என்பது விளங்கும்.
பிப் 2006-ல், தனது 19வது வயதில், ரோஹித் தனது சீனியர் கிரிக்கெட் பயணத்தை, மேற்கு மண்டல அணியின் சார்பில் தியோதர் போட்டி ஆட்டமொன்றில், தொடங்கியபோதே, அபரிமிதமான திறமை கொண்டவராக பலராலும் சிலாகிக்கப்பட்டவர். அதே ஆட்டம் தான் செத்தேஷ்வர் புஜாராவுக்கும் ரவிந்திர ஜடேஜாவுக்கும் கூட முதல் ஆட்டம் என்பது கூடுதல் தகவல். ரோஹித்தும் ஜடேஜாவும் மேற்கு மண்டல வெற்றிக்கு வழிவகுத்தனர்.
அடுத்த ஆண்டிலேயே, இந்திய ஒரு நாள் போட்டிக்கான கிரிக்கெட் அணியில் இடம் கிடைத்து விட்டாலும், அத்தனை திறமை இருந்தும், சர்வதேச அளவில் ரோஹித் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள 6 ஆண்டுகள் ஆனது. இடையே, T-20 உலகக்கோப்பையை (2007) இந்தியா வெல்ல, தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் சிறப்பாக ஆடினார். 2011-ல் ஒரு நாள் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் ரோஹித் இடம் பெறவில்லை.
அசாத்திய திறமைக்குத் தக்கவாறு பரிமளிக்க இயலாத, சற்றே அயற்சியான, அந்த காலகட்டத்தில், ஐபிஎல் T-20 மற்றும் ஒருநாள் ஆட்டங்களில் குறிப்பிடத்தக்க சிலபல இன்னிங்ஸ்களை ரோஹித் ஆடியிருக்கிறார். அவரது தலைமையில் 2013-ல் மும்பை அணி ஐபிஎல் T-20 கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
அவரது ஆதிரடி ஆட்டம் கூட, பேட்டிங் இலக்கணத்திலிருந்து அதிகம் விலகாமல், விவிஎஸ்.லஷ்மண் ஆட்டத்திற்கு இணையான, கண்ணுக்கு விருந்தாக அமையும் தன்மை கொண்டதாகவே தொடர்ந்தது. அசுர பலத்தை விடவும், கிரிக்கெட் ஆட்டத்திற்கு மிக முக்கியமான டைமிங் என்ற சங்கதியும், மைதானத்தில் இடைவெளிகளில் பந்தைச் செலுத்தும் லாவகமும், பந்தை எதிர்கொள்ள அவருக்குக் கிட்டும் ஒரு அரை வினாடி அதிக நேரமும் ரோஹித்துக்கு இயற்கையாகவே வாய்க்கப் பெற்றவை. ஆடுகளத்தைச் சுற்றி எல்லாத் திசைகளிலும் நேர்த்தியாக ஷாட்கள் ஆடக்கூடிய திறனும் ரோஹித்துக்கு பெரிய பலம். அதோடு, ரெய்னா, ஜடேஜாவுக்கு இணையான சிறந்த பந்து தடுப்பாளரும் கூட.
டெஸ்ட் போட்டியில் அசாருதீனுக்கு மாற்றாக விவிஎஸ்.லஷ்மண் பரிமளித்தது போல, விவிஎஸ்ஸின் இடத்திற்கு மாற்றுத் தேர்வாகவே ரோஹித் கருதப்பட்டார். ஆனால், அவருக்கு முன்னமே, ரெய்னா, புஜாரா, விராத் ஆகியோர் இந்திய டெஸ்ட் அணியில் நுழைந்து விட்டனர். ஒரு வழியாக, வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான நவம்பர் 2013 டெஸ்ட் தொடரில் களமிறங்கி, தனது முதல் மற்றும் அடுத்த ஆட்டங்களில் தொடர் சதங்கள் அடித்தும், பின் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் ஆட்டங்களில் ரோஹித் சறுக்கலைச் சந்தித்தார்.
ஜனவரி 2013-ல், ஒரு நாள் போட்டிகளில், துவக்க ஆட்டக்காரராக ரோஹித் ஆட ஆரம்பித்த பின் தான் அவரது திறமையின் முழு வீச்சைக் காணும் வாய்ப்பு நமக்கு ஏற்பட்டது.
2013 ஜனவரியிலிருந்து, சமீபத்தில் இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் குவித்து ஓர் உலக சாதனையை நிகழ்த்திய போட்டி வரை, ரோஹித் ஆடிய 38 போட்டிகளில், 3 சதங்கள், 11 அரைச்சதங்கள் என்று ரன்களை (சராசரி 53) குவித்ததைப் பார்க்கையில் ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் உலகக்கோப்பை போட்டியில், இந்தியா கோப்பையை தக்க வைத்துக் கொள்ளும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவே தோன்றுகிறது!
மேலே குறிப்பிட்ட ரோஹித்தின் 3 சதங்களில், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பங்களூரில் அடித்த மற்றொரு இரட்டைச்சதமும் (209) உண்டு. ஆக, ஒரு நாள் (50 ஓவர்) சர்வதேசப் போட்டிகளில், 2 இரட்டைச்சதங்கள் அடித்த ஒரே கிரிக்கெட் வீரர் என்ற பெருமையும் ரோஹித்துக்குச் சேர்கிறது. இருப்பினும் இன்றைய T-20 உலகத்தில் இச்சாதனையை மிஞ்சுவது கடினம் என்று கூற இயலவில்லை! ஒரு நாள் போட்டியில் ஒருவர் 300 ரன்கள் எடுக்கும் வாய்ப்பு இருப்பதாகவேத் தோன்றுகிறது. அதுவரை
ரோஹித் தான் சூப்பர் ஹீரோ.
”அன்புடன்”
பாலா
நன்றி: கல்கி